“நடுக்கடலில் எழுதாத பேனாவுக்கு ரூ. 82 கோடியா?” - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

edappadi-palanisamy-speech-at-salem-and-criticized-udhayanidhi-and-dmk-kalaignar-pen-memorial-nw-azt
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-17 19:54:00

சேலம் மாவட்டம், மேச்சேரி பகுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இன்று (17ம் தேதி) காலை, சென்னையில் உதயநிதி ஸ்டாலினின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் 48 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

“நமது திட்டங்களை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. ஏன் எல்லா திட்டத்திற்கும் கலைஞர் பெயரை வைக்கிறீர்கள் என்று அவர் கேட்டுள்ளார். தன் 96 வயதுவரை தமிழ்நாட்டிற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் ஓயாமல் உழைத்த கலைஞரின் பெயரை வைக்காமல், வேறு யார் பெயரை வைப்பது. கூவத்தூரில் ஊர்ந்து சென்ற கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா?.

மூன்று மாதத்திற்கு முன்பாக எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார். இந்நிலையில், சேலத்தில் 10 நாள்களுக்கு முன்பாக ஒரு ஐடி ரெய்டு நடந்தது. அந்த ரெய்டு நடந்த அடுத்த நாளே, ‘கூட்டணி குறித்து இப்போது ஏதும் பேசமுடியாது. தேர்தல் நெருக்கத்தில் இதனைப் பற்றி பேசிக்கொள்ளலாம்’ என்று தெரிவித்துவிட்டார்.

இன்னும் ஒரு ரெய்டு நடந்தால்போது அதிமுகவை பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்துவிடுவார். இன்று அதிமுகவின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது” என்று பேசினார்.

இந்நிலையில் மேச்சேரியில் நடந்த கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நாம் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் வேலை. கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் வேலை இல்லை. விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஆட்சி செய்ய வேண்டும். 50 ஆண்டுகாலமாக காவிரி நதி நீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. காவிரி நதி நீர் பிரச்சனையை தீர்க்க கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை கொண்டுவர வேண்டும்.

விவசாயிகளை பற்றி திமுக அரசுக்கு கவலை இல்லை. தனக்கு என்ன வருமானம் கிடைக்கிறது என்பதே திமுகவின் நோக்கம். அரசுக்கு வருவாய் கிடைக்கிறதோ இல்லையோ, அவர்களது கஜானாவிற்கு வருவாய் கிடைக்கிறது.

நடுக்கடலில் எழுதாத பேனா நினைவு சின்னத்திற்கு ரூ. 82 கோடி தேவையா? கலைஞர் நினைவிடத்தில் ரூ. 2 கோடியில் பேனா சின்னம் அமைத்தால் போதாதா? மக்களின் வரிப்பணத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி. அப்பா மகனை புகழ்ந்து பேசுகிறார். மகன் அப்பாவை புகழ்ந்து பேசுகிறார். இதுதான் வேடிக்கை. ரெய்டை பார்த்து எங்களுக்கு பயமில்லை. எதையும் எதிர்கொள்ளும் சக்தி அதிமுகவிற்கு உள்ளது. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.

பாஜகவுடன் கூட்டணி வைக்க ஸ்டாலின் தான் முயற்சி செய்கிறார். ரெய்டு உங்களுக்குத்தான் வரும், எங்களுக்கு இல்லை. திமுக ஆட்சியால் எந்த நன்மையும் இல்லை. அதிமுக ஆட்சி விவசாயிகளுக்கு பொற்காலம்” என்று பேசினார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next